அகல் வாய் வானம்

 
365. பாலை
அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப,
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகிய புன்கண் மாலை,
அத்த நடுகல் ஆள் என உதைத்த
5
கான யானைக் கதுவாய் வள் உகிர்,
இரும் பனை இதக்கையின், ஒடியும் ஆங்கண்,
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை,
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
என்றூழ் வெஞ் சுரம் தந்த நீயே
10
துயர் செய்து ஆற்றாயாகி, பெயர்பு, ஆங்கு
உள்ளினை வாழிய, நெஞ்சே! வென் வேல்
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்,
பூதம் தந்த பொரி அரை வேங்கைத்
தண் கமழ் புது மலர் நாறும்
15
அம் சில் ஓதி ஆய் மடத் தகையே.

தலைமகன் இடைச் சுரத்து நின்று சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்