அத்தப் பாதிரித் துய்த் தலைப்

 
191. பாலை
அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ
எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ,
வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி,
தோல் புதை சிரற்று அடி, கோலுடை உமணர்
5
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி,
அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து அவர்
மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி,
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு
10
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை,
அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி,
சென்று, வினை எண்ணுதிஆயின், நன்றும்,
உரைத்திசின் வாழி என் நெஞ்சே! 'நிரை முகை
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி,
15
அறல் என விரிந்த உறல் இன் சாயல்
ஒலி இருங் கூந்தல் தேறும்' என,
வலிய கூறவும் வல்லையோ, மற்றே?

தலைமகன் தன் நெஞ்சிற்குச் செலவு அழுங்கியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்