ஆள்வினைப் பிரிதலும் உண்டோ

 
353. பாலை
ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும்,
கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும்
கனவுக் கழிந்தனையவாகி, நனவின்,
நாளது செலவும், மூப்பினது வரவும்,
5
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்,
இந் நிலை அறியாய்ஆயினும், செந் நிலை
அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல,
10
கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு,
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி,
அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி,
தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து,
உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர,
15
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து,
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர்,
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத்
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
20
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி,
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை,
நம்மொடு நன் மொழி நவிலும்
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே?

முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருள் முற்றி வந்திருந்த காலத்து, மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்