இருங் கழி மலர்ந்த

 
270. நெய்தல்
இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்,
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து
இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும்
மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே;
5
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும்
கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே,
கொய் சுவற் புரவிக் கை வண் கோமான்
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன,
10
அம் மா மேனி தொல் நலம் தொலைய,
துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே,
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச்
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும்,
15
நும் ஊர் உள்ளுவை; நோகோ, யானே.

பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. -சாகலாசனார்