இரு பெரு வேந்தர்

 
174. முல்லை
'இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து,
ஒரு படை கொண்டு, வருபடை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' என,
பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
5
செல்வேம்ஆதல் அறியாள், முல்லை
நேர் கால் முது கொடி குழைப்ப, நீர் சொரிந்து,
காலை வானத்துக் கடுங் குரற் கொண்மூ
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து,
பழங்கண் கொண்ட பசலை மேனியள்,
10
யாங்கு ஆகுவள்கொல் தானே வேங்கை
ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள,
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள்,
நல் மணல் வியலிடை நடந்த
சில் மெல் ஒதுக்கின், மாஅயோளே?

பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்