இரும் பிடிப் பரிசிலர் போலக்

 
311. பாலை
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று,
அருங் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை,
எழுதியன்ன திண் நிலைக் கதவம்
கழுது வழங்கு அரை நாள், காவலர் மடிந்தென,
5
திறந்து நப் புணர்ந்து, 'நும்மின் சிறந்தோர்
இம்மை உலகத்து இல்' எனப் பல் நாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடு,
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப,
வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர்
10
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்
புல்லி நல் நாட்டு உம்பர், செல் அருஞ்
சுரம் இறந்து ஏகினும், நீடலர்
அருள் மொழித் தேற்றி, நம் அகன்றிசினோரே.

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்