உலகு உடன் நிழற்றிய

 
204. முல்லை
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை,
கடல் போல் தானை, கலிமா, வழுதி
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச்
சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே
5
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில்,
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப,
உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து,
செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர்
10
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும்
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித்
தண்டலை கமழும் கூந்தல்,
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே.

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்