உவக்குநள்ஆயினும்

 
203. பாலை
'உவக்குநள்ஆயினும், உடலுநள்ஆயினும்,
யாய் அறிந்து உணர்க' என்னார், தீ வாய்
அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்,
'இன்னள் இனையள், நின் மகள்' என, பல் நாள்
5
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்,
'நாணுவள் இவள்' என, நனி கரந்து உறையும்
யான் இவ் வறு மனை ஒழிய, தானே,
'அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல்' என, கழற் கால்
10
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற,
பல் மலை அருஞ் சுரம் போகிய தனக்கு, யான்
அன்னேன் அன்மை நன் வாயாக,
மான் அதர் மயங்கிய மலைமுதல் சிறு நெறி
வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப்
15
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்,
செல் விருந்து ஆற்றி, துச்சில் இருத்த,
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுகமன்னே!

மகட் போக்கிய தாய் சொல்லியது. - கபிலர்