உவர் விளை உப்பின்

 
390. நெய்தல்
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி,
அதர் படு பூழிய சேண் புலம் படரும்
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறிக்
கண நிரை வாழ்க்கைதான் நன்றுகொல்லோ?
5
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள,
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த
பல் குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி,
' ''நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!
கொள்ளீரோ'' எனச் சேரிதொறும் நுவலும்,
10
அவ் வாங்கு உந்தி, அமைத் தோளாய்! நின்
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்' என,
சிறிய விலங்கினமாக, பெரிய தன்
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி,
'யாரீரோ, எம் விலங்கியீஇர்?' என,
15
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற
சில் நிரை வால் வளைப் பொலிந்த
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே!

தலைமகன் பாங்கற்குச் சொல்லியது; நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - அம்மூவனார்