உள் ஆங்கு உவத்தல்

 
111. பாலை
உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி
வருவர் வாழி, தோழி! அரச
யானை கொண்ட துகிற் கொடி போல,
5
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர,
மழை என மருண்ட மம்மர் பல உடன்
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
10
அத்தக் கேழல் அட்ட நற் கோள்
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப,
குருதி ஆரும் எருவைச் செஞ் செவி,
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட
புண் தேர் விளக்கின், தோன்றும்
15
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே.

தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ