உளைமான் துப்பின்

 
102. குறிஞ்சி
உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக்
கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென;
உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு
ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா,
5
ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட;
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது,
படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்;
10
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப,
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன்,
காவலர் அறிதல் ஓம்பி, பையென
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,
உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து,
15
இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி!
இன்று எவன்கொல்லோ கண்டிகும் மற்று அவன்
நல்காமையின் அம்பல் ஆகி,
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின்
இருஞ் சூழ் ஓதி ஒண் நுதற் பசப்பே?

இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன்