எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து

 
106. மருதம்
எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து,
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன்,
வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப்
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
5
துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது
செய்யாம்ஆயினும், உய்யாமையின்,
செறிதொடி தெளிர்ப்ப வீசி, சிறிது அவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி!
10
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும்
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும்
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே.

தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - ஆலங்குடி வங்கனார்