என் மகள் பெரு மடம்

 
397. பாலை
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட,
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப,
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
மணன் இடையாகக் கொள்ளான், 'கல் பகக்
5
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம்
எளியவாக, ஏந்து கொடி பரந்த
பொறி வரி அல்குல் மாஅயோட்கு' எனத்
தணிந்த பருவம் செல்லான், படர்தரத்
துணிந்தோன்மன்ற துனை வெங் காளை
10
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்தி,
போழ் புண் படுத்த பொரி அரை ஓமைப்
பெரும் பொளிச் சேயரை நோக்கி, ஊன் செத்து,
கருங் கால் யாஅத்துப் பருந்து வந்து இறுக்கும்
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடுங் கோட்டுக்
15
கோடை வெவ் வளிக்கு உலமரும்
புல் இலை வெதிர நெல் விளை காடே.

மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்