ஒறுப்ப ஓவலை

 
342. குறிஞ்சி
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை;
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு யான்
கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
5
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்,
ஏவல் இளையர் தலைவன், மேவார்
அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப்
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை,
10
கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
வரையரமகளிரின் அரியள்,
அவ் வரி அல்குல் அணையாக்காலே!

அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார்