வாங்கு அமை புரையும்

 
343. பாலை
வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத் தோள்,
சில் சுணங்கு அணிந்த, பல் பூண், மென் முலை,
நல் எழில், ஆகம் புல்லுதல் நயந்து,
மரம் கோள் உமண் மகன் பேரும் பருதிப்
5
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்,
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து, அவ்
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்,
10
நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ் சினை,
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார்,
நெடுஞ் செவிக் கழுதைக் குறுங் கால் ஏற்றைப்
புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த
பெயர் படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி,
15
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய்; பெயர்ந்து நின்று
உள்ளினை வாழி, என் நெஞ்சே! கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண்,
சில் மொழிப் பொலிந்த துவர் வாய்,
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே.

தலைமகன் இடைச் சுரத்து மீளக் கருதிய நெஞ்சினைக் கழறிப் போயது. -மதுரை மருதன் இளநாகனார்