விசும்பு விசைத்து எழுந்த

 
273. பாலை
விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின்,
பசுங் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ,
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப,
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம்,
5
நலம் கவர் பசலை நலியவும், நம் துயர்
அறியார்கொல்லோ, தாமே? அறியினும்,
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்,
நம்முடை உலகம் உள்ளார்கொல்லோ?
யாங்கு என உணர்கோ, யானே? வீங்குபு
10
தலை வரம்பு அறியாத் தகை வரல் வாடையொடு
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி,
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை,
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பி,
15
புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம்
நில வரை எல்லாம் நிழற்றி,
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே.

பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது.-ஒளவையார்