கடுந் தேர் இளையரொடு நீக்கி

 
310. நெய்தல்
கடுந் தேர் இளையரொடு நீக்கி, நின்ற
நெடுந் தகை நீர்மையை அன்றி, நீயும்,
தொழுதகு மெய்யை, அழிவு முந்துறுத்து,
பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றலின்,
5
குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு
இவளும் பெரும் பேதுற்றனள்; ஓரும்
தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்ட,
காதலின் வளர்ந்த மாதர்ஆகலின்,
பெரு மடம் உடையரோ, சிறிதே; அதனால்,
10
குன்றின் தோன்றும் குவவு மணற் சேர்ப்ப!
இன்று இவண் விரும்பாதீமோ! சென்று, அப்
பூ விரி புன்னைமீது தோன்று பெண்ணைக்
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த
15
இளைப் படு பேடை இரிய, குரைத்து எழுந்து
உரும் இசைப் புணரி உடைதரும்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே.

தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி சொல்லியது. - நக்கீரனார்