கண்டிசின் மகளே

 
369. பாலை
கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை:
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு,
மங்கையர் பல பாராட்ட, செந் தார்க்
கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல்
5
சேயிழை மகளிர் ஆயமும் அயரா;
தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக்
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப்
பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர,
இவை கண்டு, இனைவதன்தலையும், நினைவிலேன்,
10
கொடியோள் முன்னியது உணரேன், 'தொடியோய்!
இன்று நின் ஒலி குரல் மண்ணல்' என்றதற்கு,
எற் புலந்து அழிந்தனளாகி, தற் தகக்
கடல்அம் தானை கை வண் சோழர்,
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன,
15
நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து,
தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல்
ஓமை நீடிய உலவை நீள் இடை,
மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல்,
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
20
அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி,
'சிறப்பும் சீரும் இன்றி, சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
25
ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ,
மேயினள்கொல்?' என நோவல் யானே.

மகட் போக்கிய செவிலி சொல்லியது. - நக்கீரர்