கயந் தலை மடப் பிடி

 
165. பாலை
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென,
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ,
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்,
5
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும்
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும்
'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!' என,
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென,
10
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ,
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி,
'தருமணற் கிடந்த பாவை என்
அருமகளே என முயங்கினள் அழுமே!

மகட் போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது. - ......