வெள்ளி விழுத் தொடி

 
286. மருதம்
வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை,
வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க;
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ,
காஞ்சி நீழல், தமர் வளம் பாடி,
5
ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர!
விழையா உள்ளம் விழையும் ஆயினும்,
என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு, ஆங்கு,
10
அறனும் பொருளும் வழாமை நாடி,
தற் தகவு உடைமை நோக்கி, மற்று அதன்
பின் ஆகும்மே, முன்னியது முடித்தல்;
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால்,
அரிய பெரியோர்த் தெரியுங்காலை,
15
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்,
மெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே?

'வரைந்து எய்துவல்' என்று நீங்கும் தலைமகன், 'தலைமகளை ஆற்றுவித்துக் கொண் டிருத்தல் வேண்டும்' என்று தோழியைக் கைப்பற்றினாற்கு, கைப்பற்றியது தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதி, சொல்லியது. - ஓரம்போகியார்