வேர் முழுது உலறி

 
145. பாலை
வேர் முழுது உலறி நின்ற புழற்கால்,
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
வற்றல் மரத்த பொற் தலை ஓதி
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
5
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு
வாள்வரி பொருத புண் கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வார,
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும்
10
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர்
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல,
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில்
15
குஞ்சரக் குரல குருகோடு ஆலும்,
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை,
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற்
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது,
20
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம்,
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என்
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே!

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்