வேளாப் பார்ப்பான்

 
24. முல்லை
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
தளை பிணி அவிழா, சுரி முகப் பகன்றை,
சிதரல் அம் துவலை தூவலின், மலரும்
5
தைஇ நின்ற தண் பெயல் கடைநாள்,
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை,
விசும்பு உரிவதுபோல், வியல் இடத்து ஒழுகி,
மங்குல் மா மழை, தென் புலம் படரும்
பனி இருங் கங்குலும் தமியள் நீந்தி,
10
தம் ஊரோளே, நன்னுதல்; யாமே,
கடி மதில் கதவம் பாய்தலின், தொடி பிளந்து,
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு,
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி,
கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு,
15
தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து,
கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த் தோள்,
இரவுத் துயில் மடிந்த தானை,
உரவுச் சின வேந்தன் பாசறையேமே.

தலைமகன் பருவங் கண்டு சொல்லியது. வினைமுற்றும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - ஆவூர் மூலங் கிழார்