கழிப் பூங் குற்றும்

 
330. நெய்தல்
கழிப் பூங் குற்றும், கானல் அல்கியும்,
வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும்,
இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும்,
தன் துயர் வெளிப்படத் தவறி, நம் துயர்
5
அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு
செல்லும், அன்னோ; மெல் அம் புலம்பன்!
செல்வோன் பெயர் புறத்து இரங்கி, முன் நின்று,
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம்
எய்தின்றுகொல்லோ தானே? எய்தியும்,
10
காமம் செப்ப, நாண் இன்றுகொல்லோ?
உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே;
குப்பை வெண் மணற் குவவுமிசையானும்,
எக்கர்த் தாழை மடல்வயினானும்,
ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு,
15
சிறுகுடிப் பரதவர் பெருங் கடல் மடுத்த
கடுஞ் செலல் கொடுந் திமில் போல,
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே!

தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குத் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார்