கறங்கு வெள் அருவி

 
118. குறிஞ்சி
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்,
தேம் கமழ் இணர வேங்கை சூடி,
தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ,
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
5
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட,
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள,
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப்
பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள்
10
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்.
என் ஆகுவள்கொல்தானே? பல் நாள்
புணர் குறி செய்த புலர்குரல் ஏனல்
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்;
அளியள்தான், நின் அளி அலது இலளே!

செறிப்பு அறிவுறீஇ, 'இரவும் பகலும் வாரல்' என்று வரைவு கடாஅயது.- கபிலர்