காய்ந்து செலற் கனலி

 
55. பாலை
காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின்,
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை,
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின்,
விளி முறை அறியா வேய் கரி கானம்,
5
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள்
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து யாம்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ,
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன், கனவ ஒண் படைக்
10
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென,
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
15
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண்
காதல் வேண்டி, எற் துறந்து
போதல்செல்லா என் உயிரொடு புலந்தே.

புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார்