கான் உயர் மருங்கில்

 
193. பாலை
கான் உயர் மருங்கில் கவலை அல்லது,
வானம் வேண்டா வில் ஏர் உழவர்
பெரு நாள் வேட்டம், கிளை எழ வாய்த்த,
பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ் வாய்,
5
பொறித்த போலும் வால் நிற எருத்தின்,
அணிந்த போலும் செஞ் செவி, எருவை;
குறும் பொறை எழுந்த நெடுந் தாள் யாஅத்து
அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட,
விரைந்து வாய் வழுக்கிய கொழுங் கண் ஊன் தடி
10
கொல் பசி முது நரி வல்சி ஆகும்
சுரன் நமக்கு எளியமன்னே; நல் மனைப்
பல் மாண் தங்கிய சாயல், இன் மொழி,
முருந்து ஏர் முறுவல், இளையோள்
பெருந் தோள் இன் துயில் கைவிடுகலனே.

பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்