கானப் பாதிரிக் கருந் தகட்டு

 
261. பாலை
கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர,
சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த்
தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல்
5
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி, சிலம்பு நகச்
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின்
அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி
ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய்,
10
நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு,
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை
அருஞ் சுரத்து அல்கியேமே இரும் புலி
களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு
வில்லோர் குறும்பில் ததும்பும்,
15
வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே.

புணர்ந்து உடன் போயின காலை, இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ