குண கடல் முகந்த

 
278. குறிஞ்சி
குண கடல் முகந்த கொள்ளை வானம்
பணை கெழு வேந்தர் பல் படைத் தானைத்
தோல் நிரைத்தனைய ஆகி, வலன் ஏர்பு,
கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி,
5
உரும் உரறு அதிர் குரல் தலைஇ, பானாள்,
பெரு மலை மீமிசை முற்றினஆயின்,
வாள் இலங்கு அருவி தாஅய், நாளை,
இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி
வருவதுமாதோ, வண் பரி உந்தி,
10
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை;
பனி பொரு மழைக் கண் சிவப்ப, பானாள்
முனி படர் அகல மூழ்குவம்கொல்லோ
மணி மருள் மேனி ஆய்நலம் தொலைய,
தணிவு அருந் துயரம் செய்தோன்
15
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே?

இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. - கபிலர்