கோடுற நிவந்த நீடு
|
|
கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின்
|
|
அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை,
|
|
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ,
|
|
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்
|
5
|
இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ,
|
|
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண்
|
|
நோக்குதொறும் நோக்குதொறும்
தவிர்விலையாகி,
|
|
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து,
|
|
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே
|
10
|
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்
|
|
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
|
|
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
|
|
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்,
|
|
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன,
|
15
|
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனி அஃது
|
|
அவலம் அன்றுமன், எமக்கே; அயல
|
|
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த
|
|
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை
|
|
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும்
|
20
|
திரு மணி விளக்கின் அலைவாய்ச்
|
|
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே!
|
பரத்தையிற் பிரிந்து வந்து
கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.
-பரணர்
|
|
மேல் |