சிறு புன் சிதலை
|
|
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
|
|
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்,
|
|
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப்
|
|
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும்
|
5
|
அத்த நீள் இடைப் போகி, நன்றும்
|
|
அரிது செய் விழுப் பொருள் எளிதினின்
பெறினும்
|
|
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர்
|
|
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க,
|
|
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
|
10
|
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
|
|
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ,
|
|
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய
|
|
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன்
|
|
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
|
15
|
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய,
|
|
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
|
|
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
|
|
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
|
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே.
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த்
தாயங்கண்ணனார்
|
|
மேல் |