செய்வது தெரிந்திசின் தோழி

 
281. பாலை
செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும்,
அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி,
5
வான் போழ் வல் வில் சுற்றி, நோன் சிலை
அவ் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல்
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
10
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து,
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து, அவரோ சென்றனர்
பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்