செல்லல் மகிழ்ந

 
376. மருதம்
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன்
கல்லா யானை கடி புனல் கற்றென,
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை,
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
5
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப,
10
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ!
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின்
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின்
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி,
15
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய,
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக்
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே!

காதற்பரத்தை புலந்து சொல்லியது. - பரணர்