செறுவோர் செம்மல் வாட்டலும்

 
231. பாலை
'செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்,
இல் இருந்து அமைவோர்க்கு இல், என்று எண்ணி,
நல் இசை வலித்த நாணுடை மனத்தர்
5
கொடு விற் கானவர் கணை இடத் தொலைந்தோர்,
படு களத்து உயர்த்த மயிர்த் தலைப் பதுக்கைக்
கள்ளி அம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ,
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை
வெஞ் சுரம் இறந்தனர்ஆயினும், நெஞ்சு உருக
10
வருவர் வாழி, தோழி! பொருவர்
செல் சமம் கடந்த செல்லா நல் இசை,
விசும்பு இவர் வெண் குடை, பசும் பூட் பாண்டியன்
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின்
ஆடு வண்டு அரற்றும் முச்சித்
15
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்