தம் நயந்து உறைவோர்த்

 
151. பாலை
'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!' என,
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
5
ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த
கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில்
தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள்
10
அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும்
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்,
கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு
உறுவது கூறும், சிறு செந் நாவின்
மணி ஓர்த்தன்ன தெண் குரல்
15
கணி வாய், பல்லிய காடு இறந்தோரே!

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-காவன்முல்லைப் பூதரத்தனார்