தா இல் நல் பொன்

 
212. குறிஞ்சி
தா இல் நல் பொன் தைஇய பாவை
விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன,
மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால்,
கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற
5
முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய்,
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி,
அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில்,
10
பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும்,
இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே
என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று,
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ,
15
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை
மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன்
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து,
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி,
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய
20
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக்
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது
எளியள் அல்லோட் கருதி,
விளியா எவ்வம் தலைத் தந்தோயே.

அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. -பரணர்