திரை உழந்து அசைஇய

 
190. நெய்தல்
திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி, எல் பட,
வரு திமில் எண்ணும் துறைவனொடு, ஊரே
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே;
5
அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்;
அலையல் வாழி! வேண்டு, அன்னை! உயர்சிமைப்
பொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த
வம்ப நாரை இரிய, ஒரு நாள்,
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும்,
10
உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை
இருங் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி
வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப,
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில
நிரைமணிப் புரவி விரைநடை தவிர,
15
இழுமென் கானல் விழு மணல் அசைஇ,
ஆய்ந்த பரியன் வந்து, இவண்
மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே!

தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - உலோச்சனார்