தோள் புலம்பு அகலத் துஞ்சி

 
187. பாலை
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,
5
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர்
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி,
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன,
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம்
10
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்,
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து,
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி,
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன
15
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து
வேனில் வெற்பின் கானம் காய,
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை,
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து,
20
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி,
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர்
வைகு கடல் அம்பியின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார்