தோளும் தொல் கவின் தொலைய

 
347. பாலை
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
நலம் கவர் பசலை நல்கின்று நலிய,
சால் பெருந் தானைச் சேரலாதன்
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய
5
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன,
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய,
சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே
வாய்க்கதில் வாழி, தோழி! வாயாது,
10
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து,
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, குவவு அடி
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ,
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி
கை தலை வைத்த மையல் விதுப்பொடு,
15
கெடு மகப் பெண்டிரின் தேரும்
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!

தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்