நகை நீ கேளாய் தோழி

 
248. குறிஞ்சி
நகை நீ கேளாய் தோழி! அல்கல்;
வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ,
இளையர் எய்துதல் மடக்கி, கிளையொடு
நால்முலைப் பிணவல் சொலிய கான் ஒழிந்து,
5
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற
தறுகட் பன்றி நோக்கி, கானவன்
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி
மடை செலல் முன்பின் தன் படை செலச் செல்லாது,
'அரு வழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம்' என,
10
எய்யாது பெயரும் குன்ற நாடன்
செறி அரில் துடக்கலின், பரீஇப் புரி அவிழ்ந்து,
ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை,
ஏற்று இமிற் கயிற்றின், எழில் வந்து துயல்வர,
இல் வந்து நின்றோற் கண்டனள், அன்னை;
15
வல்லே என் முகம் நோக்கி,
'நல்லை மன்!' என நகூஉப் பெயர்ந்தோளே.

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்ப, தோழி சொல்லியது. - கபிலர்