நம் நயந்து உறைவி

 
379. பாலை
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய,
தெருளாமையின் தீதொடு கெழீஇ,
அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து,
ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே!
5
நினையினைஆயின், எனவ கேண்மதி!
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை,
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி,
நனவின் இயன்றதுஆயினும், கங்குல்
கனவின் அற்று, அதன் கழிவே; அதனால்,
10
விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி,
சுவல்மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப,
செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு,
எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி,
15
மெய் புகுவன்ன கை கவர் முயக்கின்
மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின்
பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி,
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு,
20
உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல்,
அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள்
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர,
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு நின்று,
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப்
25
பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த
நிரம்பா நீள் இடைத் தூங்கி,
இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே?

முன் ஒரு காலத்துப் பொருள் முற்றிவந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ