நரை விராவுற்ற நறு மென்

 
254. முல்லை
'நரை விராவுற்ற நறு மென் கூந்தற்
செம் முது செவிலியர் பல பாராட்ட,
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி
மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாஅ,
5
மனை உறை புறவின் செங் காற் சேவல்
துணையொடு குறும் பறை பயிற்றி, மேல் செல,
விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும்
நம்வயின் நினையும் நல் நுதல் அரிவை
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல,
10
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி,
வந்து வினை முடித்தனம்ஆயின், நீயும்,
பணை நிலை முனைஇய, வினை நவில், புரவி
இழை அணி நெடுந் தேர் ஆழி உறுப்ப,
நுண் கொடி மின்னின், பைம் பயிர் துமிய,
15
தளவ முல்லையொடு தலைஇ, தண்ணென
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்
நெடி இடை பின் படக் கடவுமதி, என்று யான்
சொல்லிய அளவை, நீடாது, வல்லென,
தார் மணி மா அறிவுறாஅ,
20
ஊர் நணித் தந்தனை, உவகை யாம் பெறவே!

வினை முற்றி வந்து எய்திய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்