நன் கலம் களிற்றொடு

 
124. முல்லை
'நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி,
வந்து திறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து
சென்றீக' என்பஆயின், வேந்தனும்
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு
5
இன்றே புகுதல் வாய்வது; நன்றே.
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத்
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுற,
பாசறை வருத்தம் வீட, நீயும்
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயற் புனை படை,
10
கொய்சுவல், புரவி, கை கவர் வயங்கு பரி,
வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை
வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய,
காலை எய்த, கடவுமதி மாலை
அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை
15
அரமிய வியலகத்து இயம்பும்
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே.

தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்