நீர் நிறம் கரப்ப

 
18. குறிஞ்சி
நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,
பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று,
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி,
மராஅ யானை மதம் தப ஒற்றி,
5
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து,
நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து
ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப!
ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள்,
10
வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும்
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால்,
உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக்
கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை,
15
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில்,
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய்
ஓம்பினள் எடுத்த, தட மென் தோளே.

தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது. - கபிலர்