நீள் இரும் பொய்கை

 
276. மருதம்
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன்
அடி அறிவுறுதல் அஞ்சி, பைபயக்
கடி இலம் புகூஉம் கள்வன் போல,
5
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு
ஆவது ஆக! இனி நாண் உண்டோ?
வருகதில் அம்ம, எம் சேரி சேர!
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண,
தாரும் தானையும் பற்றி, ஆரியர்
10
பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல,
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன்
மார்பு கடி கொள்ளேன்ஆயின், ஆர்வுற்று
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல்,
பரந்து வெளிப்படாது ஆகி,
15
வருந்துகதில்ல, யாய் ஓம்பிய நலனே!

தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - பரணர்