நெருநல் எல்லை

 
32. குறிஞ்சி
நெருநல் எல்லை ஏனல் தோன்றி,
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து,
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி,
5
சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண்
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா,
'சூரரமகளிரின் நின்ற நீ மற்று
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச்
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
10
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என்
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல்
கடிய கூறி, கை பிணி விடாஅ,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற
என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என்வயின்
15
சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து,
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ.
சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே
மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று,
20
என் குறைப் புறனிலை முயலும்
அண்கணாளனை நகுகம், யாமே.

பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது; தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉம் ஆம்.- நல்வெள்ளியார்