பகலினும் அகலாதாகி

 
305. பாலை
பகலினும் அகலாதாகி, யாமம்
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய,
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
பனி மீக்கூரும் பைதல் பானாள்,
5
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை,
பருகுவன்ன காதலொடு திருகி,
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து,
ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்மாதோ;
அருளிலாளர் பொருள்வயின் அகல,
10
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து
யான் எவன் உளெனோ தோழி! தானே
பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய்,
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய,
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
15
கனை எரி பிறப்ப ஊதும்
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே?

பிரிவு உணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்