பசித்த யானைப் பழங்கண்

 
321. பாலை
பசித்த யானைப் பழங்கண் அன்ன
வறுஞ் சுனை முகந்த கோடைத் தெள் விளி
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப,
கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு
5
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது,
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப்
படு மணி இன நிரை உணீஇய, கோவலர்
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல்,
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும்
10
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர்,
துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ?
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு
எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ?
எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே!
15
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ,
யாய் அறிவுறுதல் அஞ்சி,
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே.

மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார்