பிணங்கு அரில் வள்ளை நீடு

 
256. மருதம்
பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப்
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின்
5
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு
தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர!
பொய்யால்; அறிவென், நின் மாயம். அதுவே
கையகப்பட்டமை அறியாய்; நெருநை
10
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை
ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து,
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத்
தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி,
15
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர்,
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய
அறனிலாளன்,'அறியேன்' என்ற
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய்,
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி,
20
நீறு தலைப்பெய்த ஞான்றை,
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே.

தோழி தலைமகற்கு வாயின் மறுத்தது. - மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்