பிறர் உறு விழுமம்

 
382. குறிஞ்சி
'பிறர் உறு விழுமம் பிறரும் நோப;
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்;
கடம்பு கொடி யாத்து, கண்ணி சூட்டி,
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம்
5
காடு கெழு நெடு வேட் பாடு கொளைக்கு ஏற்ப,
அணங்கு அயர் வியன் களம் பொலிய, பையத்
தூங்குதல் புரிந்தனர், நமர்' என, ஆங்கு அவற்கு
அறியக் கூறல் வேண்டும் தோழி!
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி
10
செழுங் கோட் பலவின் பழம் புணையாக,
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும்
வறன் உறல் அறியாச் சோலை,
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே!

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. - கபிலர்