புன் காற் பாதிரி

 
237.பாலை
'புன் காற் பாதிரி அரி நிறத் திரள் வீ
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப,
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்
தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ,
5
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து
இன்னா கழியும் கங்குல்' என்று நின்
நல் மா மேனி அணி நலம் புலம்ப,
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல்
செந் தீ அணங்கிய செழு நிணக் கொழுங் குறை
10
மென் தினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு,
இருங் கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு,
பால் பெய் செந்நெற் பாசவல் பகுக்கும்
புனல் பொரு புதவின், உறந்தை எய்தினும்,
15
வினை பொருளாகத் தவிரலர் கடை சிவந்து
ஐய அமர்த்த உண்கண் நின்
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -தாயங்கண்ணனார்